திருவிழா!


"அவர் ஒவ்வொரு வீட்டை கடந்து செல்லும் போதும் அந்தந்த வீட்டுக்கு முன் நின்று கொண்டிருந்த பெண்கள் முளைப்பாரியை தூக்கி கொண்டு பின் தொடர்ந்தனர் "

srikarpagam.blogspot

சிறுகதை

நிஜமான கிராமத்து திருவிழாவை பார்த்திருக்கிறீர்களா? காட்டுபாட்டிக்கு வாருங்கள். ஏனென்றால் நான் இப்போது அங்கு தான் இருக்கிறேன், மருமகனாக!ஒரு நிமிஷம்... பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு நாலே நாலு பஸ் தான் வந்து செல்லும். இப்போது திருவிழா கூட்டம் வேறு... பார்த்து வாருங்கள்!
என்னை பற்றி நாலு வார்த்தை.
நான் மதுரைவாசி. எண்பது கிலோமீட்டர் தள்ளி உள்ள காட்டுபட்டியில் ஒரு பெண்ணை பிடித்து போய் கல்யாணம் செய்து கொண்டேன். என் மனைவி ரொம்ப... சரி, சரி... மைதிலி. கோவிச்சுக்காதே. உன்னை பற்றி அப்புறம் விளக்கி விடுகிறேன்.
என் மாமனாரை பற்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அவரை சுற்றி தான் இந்த சம்பவம். அவரை அறிமுகம் செய்து வைக்கலாம் என்றால், அவர் இறந்து விட்டார். நேற்று தான் அடக்கம் செய்தார்கள். எனக்கு கூட சொல்லவில்லை. ஏனென்றால் இன்று திருவிழா... நேற்று இரவு எட்டு மணிக்கு இறந்திருக்கிறார். அந்த கிராமத்து வழக்கப்படி கேதம் சொல்ல கூடாதாம். இரவோடு இரவாக புதைத்து விட்டார்கள். இதில் விசேசம் என்னவென்றால் அவர் தான் அந்த கோவிலின் பூசாரி!
என் மாமனாருக்கு இரண்டு தம்பிகள். இருவரில் மூத்தவர்,"அண்ணி... நடந்தது நடந்து போச்சு. இந்த வருடம் சாமியை நான் தூக்குறேன்" என்றார்.
ஊர் பெரிசு ஒன்று,"அது சரி... ஆனால் உங்க அண்ணன் குடும்பம் கோவிலுக்குள்ள வர கூடாது. கேதம் விழுந்த வீடாச்சே!"
"அதெப்படி... அப்ப என் கொழுந்தனும் தான் கோவிலுக்குள்ள வர கூடாது. அப்புறம் எப்படி சாமி தூக்குவாராம்?" -இது என் மாமியார்.
"அப்ப யாரு சாமி தூக்குறது? இந்த ஊருக்குள்ள காளியாத்தால தூக்குற தைரியம் எவனுக்கு இருக்கு? அப்படியே வேற யாரும் தூக்கி... அந்த குடும்பத்துக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகி போச்சுன்னா யாரு பொறுப்பாளி..."என்று ஊர் பெரிசு உரக்க கூறி விட்டு சற்று நிறுத்தினார். பிறகு அவரே...
"அதனால இந்த வருஷம் உன் கொழுந்தனே சாமி தூக்கட்டும். ஆனா நீங்களும் உங்க குடும்பமும் கோவிலுக்குள்ள வரக்கூடாது"
"என் மகளும் மருமகனும் வந்திருக்காங்க... அவங்களுக்கு கல்யாணமாகி முத வருஷம். அவங்க வரலாமுல்ல..." எல்லோரும் என்னை பார்த்தார்கள்.
ஊர் பெரிசும் என்னை பார்த்து விட்டு,"அவங்க வரலாம். அவங்க வேற குடும்பம். நீயும் உன் ரெண்டு மகன்களும் வர கூடாது. முளைப்பாரி போட்டு இருந்தீங்கன்னா வீட்டிலேயே வச்சுக்குங்க."
"எங்கம்மா வர கூடாதுன்னா நானும் வரலே" என்றால் என் மனைவி.
"அது உங்க இஷ்டம்!"
ஊரே ஜே... ஜே... என்று இருந்தது. ஒரு வருஷமாக இயந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டு கிராமத்து திருவிழாவுக்கு வந்து கலந்து கொண்டால் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.
மேளதாளம் ஒரு பக்கம்... தப்பு செட்டு ஒரு பக்கம்... குறவன் குறத்தி ஆட்டம் ஒரு பக்கம் இதில் ஒரு விஷேசம்... குறவன் குறத்தி ஆட்டத்தை பார்க்க கூட்டத்தில் முண்டியடித்தவர்கள் பெரும்பாலும் பெரிசுகள் தான். குடும்பத்து பெண்கள் பட்டு சேலை சரசரக்க அவரவர் வீட்டுக்கு முன் வாசலில் முளைப்பாரியை சுமந்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.
தெருமுக்கில் சாமி வந்து விட்டது. என்னுடைய சின்ன மாமனார் தான் சாமியை தூக்கி கொண்டு மெதுவாக வந்து கொண்டிருந்தார். வான வேடிக்கையும் தப்பாட்டமும் தூள் பறந்தது. கேமெரா செல்போன்களும், வெளிநாட்டு கையகல கேமிராக்களும் காட்சிகளை தின்றது. அவர் ஒவ்வொரு வீட்டை கடந்து செல்லும் போதும் அந்தந்த வீட்டுக்கு முன் நின்று கொண்டிருந்த பெண்கள் முளைபாரியை தூக்கி கொண்டு பின் தொடர்ந்தனர். அவர் பின்னே வால் போல் நீண்டு வந்தது கூட்டம்.
என் சின்ன மாமியார் எங்கள் வீட்டு பெண்களிடம் ஏதோ கண் சாடை காட்டினார். அவர்களும் புரிந்து கொண்டு முளைபாரியை வெளியே கொண்டு வந்து நின்று கொண்டார்கள். எனக்கோ படபடப்பாக இருந்தது. ஏதோ தகராறு செய்ய போகிறார்கள் என்று என் மனம் அலறியது. வீட்டு வாசலுக்கு சாமி வந்து விட்டது. திடீரென்று, "டேய்... நான் ஆத்தா வந்திருக்கேண்டா... ம.. ஊ... " என்று என் சின்ன மாமியார் அலறிய அலறலில் அந்த இடமே அமைதியானது. உடனே அங்கே நின்றிருந்தவர்கள் விபூதியை எடுத்து நெற்றியில் அப்பினார்கள். அந்த விபூதிகேல்லாம் அடங்குவதாக தெரியவில்லை. கூட்டத்திலிருந்து ஒருவர் வெளிப்பட்டு,"ஆத்தா... உனக்கு என்ன வேணும்?" என்று கேட்டார்.
"டேய் ... பூசாரி குடும்பத்தையும் கோவிலுக்குள்ள வர சொல்லுடா... முளைப்பாரியை கொண்டு வர சொல்லு!" என்று கீச்சு குரலில் கத்தினார். அங்கே கசமுசா உருவானது. ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள். ஊர் பெரிசுகள் அவர்களுக்குள் பேசி கொண்டார்கள் அது வரைக்கும் சாமி ஆட்டம் நின்ற பாடில்லை. கடைசியாக...
"சரி ஆத்தா! முளைப்பாரியை தூக்கிட்டு வாங்க" என்றதும் ஆத்தா மலையேறி விட்டாள். பிரச்சனை சுமுகமாக முடிந்தது.
srikarpagam.blogspot

கடமையை செய்... பலனை...?!


யுத்த களத்தில் இருக்கும் அர்ஜுனனை பார்த்து பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், "அர்ஜுனா! நீ ஒரு கர்மயோகி என்ற முறையில் உன் கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. பற்று பாசங்களை மறந்து, வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் உன் கடமையை செய். ஒன்றுபட்ட சமநிலையே யோகம் என்பதை நீ உணர்வாயாக. பலன்களை கருத்தில் கொண்டு செயல்படுவது தாழ்ந்த நிலையாகும்" கிருஷ்ண பரமாத்மா போர்க்களத்தில் நின்ற அர்ஜுனனுக்கு கூறிய இந்த அறிவுரையே கர்மயோகமாகும்.
ஒரு செயலை செய்வதற்கு முன் அதன் முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சம் எல்லோருக்கும் இருக்கும். வெற்றி கிடைத்தாலும் கிடைக்கலாம்... தோல்வியை தழுவலாம்.
ஆகவே செயல் முடிவில் கிடைக்கும் பலனை யோசிக்காமல் மனதை ஒரு முகப்படுத்தி செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போதே அதன் பலன் தோல்வியாக இருக்குமோ என்ற அச்சத்துடனே செயல்பட்டால், மனம் படபடப்பாக இருக்கும். ஒரு நிலையில் நில்லாது. அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஒருமுனைப்படுத்தி செயலை செய்ய முடியாது.
மனம்," தோல்வி அடைந்து விடுவோமோ..." என்று பயந்த மாதிரியே, பலன் தோல்வியாகத்தான் இருக்கும். ஆகவே தான் கடமையை செய் பலனாகிய வெற்றி தோல்வியை நினைக்காதே என்று சொல்கிறார்.
கிருஷ்ணா பரமாத்மா சொன்னதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்து கொண்டு விவரிக்கிறார்கள். அதில் என்னுடைய கருத்து இது தான்.
ரஜினி, கிருஷ்ணர் கூறிய கருத்தையே மாற்றி கொடுக்கிறார். அவர் அதை அப்படி தான் புரிந்து கொண்டார் போலும். அதாவது நடித்து விட்டு அதற்கு சம்பளமாக பணத்தை எதிர்பார்க்கிறார். அதனால் தான் "கடமையை செய் பலனை எதிர்பார்" என்று தத்துவத்தையே மாற்றி விட்டார்.

என் கேள்விக்கு என்ன பதில்?


"இந்த பணவீக்கம் பணவீக்கம்னு சொல்றாங்களே... அப்படின்னா என்னண்ணே?"
"பொருட்களோட விலை ஏறுறது தாண்டா பணவீக்கம்"
"முன்னாடி 12 பெர்சென்ட் வரைக்கும் வந்துடுச்சு 13 பெர்சென்டை நெருங்கிடுச்சு அப்படின்னு சொன்னாங்க. அப்பெல்லாம் காய்கறி, அரிசி விலை எல்லாம் ரொம்ப ஏறல. ஆனா இப்ப பணவீக்கம் குறைந்திருக்குன்னு பேப்பர்காரன் போட்டு இருக்கான்... காய்கறி, அரிசி விலையெல்லாம் ஜெட் வேகத்தில ஏறிடுச்சே..."
"அடே... காய்கறி, அரிசி விலையெல்லாம் ஏறிஇருந்தாலும்,
இரும்பு கம்பி, போன்ற கட்டுமான பொருட்கள் விலையெல்லாம் விலை குறைந்திருக்கு. அதனால பணவீக்கம் குறைந்திருக்கு!"
"அப்ப பணவீக்கம் ஏறினாத்தான் காய்கறி விலை இறங்குமா...?"
"உன் கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லப்பா..."
"அப்புறம் இன்னொன்னு கேட்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்..."
"கேளுடா..."
"அமரிக்காவில கறுப்பர் அதிபரா வந்திருக்காராமில்ல..."
"ஆமா! இருநூறு வருஷ அமரிக்க சரித்திரதுல நடக்காத ஒண்ணு ! அதுக்கென்ன இப்ப?"
"அவரு நம்ம தமிழ்நாட்டுகாரரா?"
"மூஞ்சில ஒரே குத்து! மூக்கு காணாம போயிடும். அவரு ஆப்ரிக்க அப்பாவுக்கும் வெள்ளைகார அம்மாவுக்கும் பொறந்தவரு. இத ஏன் கேட்கிற?"
"இல்ல... நம்ம பசங்களெல்லாம் இந்த குதி குதிக்கிராங்களே... அதான் நம்ம
தமிழ்நாட்டுகாரர் அதிபர் அயிட்டாரோன்னு..."
"சரிதான்... அமரிக்காவில அதிபர் கறுப்பர் ஆனா என்ன, வெள்ளையர் ஆனா என்னன்னு நீ கேட்கிற... கறுப்பர் அதிபரா வந்ததால இந்தியாவுக்கும் சில நன்மைகள் கிடைக்கும். அதனால மட்டும் கொண்டாடல. அடிமையாய் இருந்த ஒரு இனத்திலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் அப்படிங்கிற விஷயம்தான் பெரிசு!"