சாதாரண இந்தியக் குடிமகனின் இன்றைய பிரச்சனை பெட்ரோல்! லாரி உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை வைத்து போராடுகிறார்கள்... இந்திய எண்ணை நிறுவன ஊழியர்கள் அவர்கள் பங்குக்கு சில கோரிக்கைகள் வைத்துப் போராடுகிறார்கள்... அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இடையே 'பெட்ரோல் டீசல்' விலையை குறைக்கச் சொல்லி ஒரு பொதுப் பிரச்சனையையும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையையும் கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை குறைத்த பிறகு லாரி உரிமையாளர்கள் லாரி வாடகையை குறைப்பார்களா என்பது அடுத்த பிரச்சனை. இந்த நிமிடம் சாதாரண இந்தியக்குடிமகனின் பிரச்சனை அதுவல்ல. அன்றாட வேலைகளையும், கடமைகளையும் செய்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக்கூட டூ-வீலரை உபயோகப்படுத்தி பழகி விட்டார்கள். இன்றைய நிலைமையில் நடுத்தர மக்கள் என்றால் டூ-வீலரையும், கொஞ்சம் உயர்ந்தவர்கள் என்றால் கார்களையும் நம்பியே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். சைக்கிளில் செல்வதற்கு கவுரவம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். "யாரு நம்ம சரவணனா... ஹோண்டா சைன்ல வருவாரே... அவர் தானே?" என்று ட்ரேட் மார்க் ஆக்கி விட்டார்கள்.
ஆகையால் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லை என்பது பேரிடியாகவே இருக்கிறது.
ஒவ்வொரு நகர பெட்ரோல் பங்குகளில் க்யூ வரிசையில் மணிக்கணக்காக நின்று பெட்ரோல் வாங்கிச் செல்லும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
இன்று நாம் அனைவரும் பணம், பணம் என்று பணத்தை துரத்தி செல்லும் தலைமுறையை உருவாக்கி கொண்டிருக்கிறோம். உணவு உற்பத்தித் தொழிலான உழவுத்தொழில் பக்கம் நம் இளைய தலைமுறையை செல்ல விடுவதில்லை. ஏனென்றால் அது லாபமற்ற தொழில். நம் தேவையை போல் மூன்று மடங்கு உணவு உற்பத்தி இருக்கிறது என்று கேள்விப்படுகிறோம். அதே நேரத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் 'இப்படியே சென்றால் உணவு உற்பத்தி குறைந்து போய், மக்களிடம் பணம் நிறைய இருந்தும் உணவு வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் ஆபத்து இருக்கிறது' என்றும் கலவரப்படுத்துகிறார்கள்.
பெட்ரோல் பங்குகளில் கூட்டத்தை பார்க்கும் போது பெட்ரோலுக்கு பதிலாக உணவுப்பொருளை வைத்து கற்பனை ஓடுகிறது. அது மாதிரி நிலையை உருவாக்காமல் இருப்பது நம் அனைவரின் கடமை அல்லவா?
நன்றி: அதிகாலை
No comments:
Post a Comment