செண்டிமெண்ட்...


பழநி...
மாலை ஐந்து மணி!
அன்னை கிளினிக் பேஷன்ட்டுகளால் நிரம்பி வழிந்தது. தன்னுடைய கேபினில் அமர்ந்திருந்த டாக்டர் சோமசந்தர் அழைப்பு மணியை அழுத்தி அடுத்த பேஷன்ட்டை வரச்சொன்னார். உள்ளே நுழைந்தவர் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண். நெற்றி நிறைய விபூதி அணிந்து பக்தி பழமாக காட்சியளித்தார். டாக்டர் அவரை அமரச்சொல்லி விட்டு ரிப்போர்ட்டை பார்த்தார்.
"சுகர் வந்திருக்கும்மா... சுகர் டேப்லெட் சாப்பிடணும்..." என்றார்.
"பாழாப்போன சுகர் எனக்கு வர வாய்ப்பில்லை டாக்டர். எங்க பரம்பரையிலேயே சுகர் கிடையாது. எனக்கு எப்படி வந்திருக்கும்"
"அம்மா... சுகர் வர்றதுக்கு பரம்பரையும் ஒரு காரணம்தான். ஆனா இப்ப வர்ற சுகர் எல்லாம் நாம வாழும் முறையை வைத்தும் வருதும்மா... "
"வாழும் முறைன்னா என்ன டாக்டர்?"
"முன்னே அம்மியில அரைச்சீங்க. இப்ப மிக்ஸியில அரைக்கிறீங்க! முன்னே ஆட்டுக்கல்லுல மாவாட்டினீங்க. இப்ப கிரைண்டர் அரைக்குது! முன்னே துணியை நீங்க துவைச்சீங்க. இப்ப மிஷின் துவைக்குது! இப்படி எல்லா வேலையும் மிஷின் பார்க்கிறதால உங்க உடம்புல இருக்கிற மிஷினை உபயோகப்படுத்தாம கெட்டுப் போச்சு, அதான்." என்றவர், அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு கடவுள் பக்தி அதிகமாக இருப்பவர் என்ற முடிவுக்கு வந்த பின், "நான் டேப்லெட் எழுதித் தர்றேன். அதை காலையில அரை மாத்திரை சாயங்காலம் அரை மாத்திரை சாப்பிடுங்க. சத்து மாத்திரையும் எழுதித் தர்றேன். அதை இரவு சாப்பிடுங்க. சர்க்கரையை ஒதுக்கிடுங்க. காப்பி டீ எல்லாத்திலும் சர்க்கரை சேர்க்க கூடாது. டெய்லி காலைல பழநி மலையை ஒரு சுத்து சுத்தி முருகனை கீழிருந்தே கும்பிட்டுட்டு வாங்க. அந்த முருகப்பெருமான் ரெண்டு மாசத்திலேயே நல்ல பலன் கொடுப்பார். அப்புறம் இங்க வாங்க மாத்திரையை குறைச்சுக்கலாம்" என்றார். அந்த அம்மாவும் சரியென்று சொல்லி விட்டு வெளியேறினார்.
இது நடந்து ஒரு மாதம் கழித்து...
அன்று வழக்கம் போல் டாக்டர் சோமசந்தர் தன் பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அழைப்பு மணியை அழுத்தி அடுத்த பேஷன்டை வரச் சொன்னார். அந்த சர்க்கரை வியாதி அம்மாவை கைத்தாங்கலாக ஒரு பெண் அழைத்து வந்தார்.
"ஏம்மா... என்னம்மா ஆச்சு?" என்று டாக்டர் கேட்டார்.
"தலை சுத்துதாம்..." என்றாள் அந்தப் பெண். உடனே வயதான அம்மாவுக்கு உடனடி சர்க்கரை பரிசோதனை நடத்தப்பட்டது. ரிசல்ட் சென்ற முறையை காட்டிலும் 50 பாய்ண்ட் அதிகமாக காண்பித்தது. வயதான அம்மாவை சற்று ஆசுவாசப்படுத்தி விட்டு, "எப்படிம்மா இப்படி ஆச்சு?"
வயதான அம்மா மெதுவாக பேச ஆரம்பித்தார். "டாக்டர்... நீங்க சொன்ன படி எல்லாம் செஞ்சேன். ஆனா அந்த முருகப்பெருமான் மனசு வைக்கலியே. சர்க்கரையை கண்ணுல கூட பார்க்கறது இல்ல! மலையை சுத்தி சாமி கும்பிட்டேன். அதுக்கு பலன்தான் இது!" என்றார். டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் சுதாரித்துக் கொண்டு...
ஒவ்வொரு கேள்வியாக கேட்டார்.
"காலையில எழுந்ததும் என்ன செய்வீங்க?"
"பல்ல விலக்கி சர்க்கரை இல்லாத காப்பி குடிப்பேன்"
"அப்புறம்?"
"நெற்றியில விபூதி பூசிட்டு நடக்க ஆரம்பிப்பேன். பக்கத்திலதான் மலை இருக்கு. அதனால கிரிவல பாதையில நடந்து ஒரு சுத்து சுத்தி முன் பக்கமா வந்து சாமியை கும்பிட்டு வருவேன்"
"அப்புறம்?"
"அப்புறம்... ஆங்... சித்தனாதன் கடையில ஒரு சின்ன பஞ்சாமிர்த டப்பா வாங்கி முருகனை மனசுல நினைச்சு சாப்பிடுவேன்"
டாக்டர் திகைத்து விட்டார். "சரியாப் போச்சு! உங்களை சாமியை கும்பிட்டுட்டு தானே வரச்சொன்னேன்... பஞ்சாமிர்தம் வாங்கி சாப்பிட சொன்னேனா?"
"அதுக்கில்ல டாக்டர்.. சாமி பிரசாதம் சாப்பிட்டா சீக்கிரம் குணமாகிடும்னு..." என்று இழுத்தார்.
டாக்டர் தலையில் அடித்துக் கொண்டார்.

நன்றி: அதிகாலை


No comments: