சுத்தம் விருது போடும்!

'சுத்தம் விருது போடுமா! இத்தனை நாள் இது தெரியாமல் போயிற்றே!' என்று நினைப்பவர்கள், தனிமனித சுத்தங்களான உடல் சுத்தம், குடல் சுத்தம், மனச்சுத்தத்துக்கு விருது என்று எண்ணி விட வேண்டாம்.
இரண்டாவதாகச் சொன்ன குடல் சுத்தத்தை செயல்படுத்துவதற்கு திறந்த வெளிகளையும் சாலையோர சாக்கடைகளையும் அசுத்தப்படுத்தி சுற்றுப்புற்ச்சூழலை கெடுத்து விடுகிறார்கள்.
இப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தன் வீட்டையும் மட்டுமே சுகாதாரமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறி விடுகிறார்கள். இதனால் தான் சிக்-குன் -குனியா, காலரா போன்ற நோய்களும், கொசுக்களின் பெருக்கமும் ஏற்படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.
ஆனால் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் மட்டும் இதை மறக்காமல், ஒவ்வொரு தனி மனிதரும் முயற்சி செய்து தங்கள் கிராமத்தையே சுகாதாரமாக வைத்து, அதற்கு விருது வாங்கி இருக்கிறார்கள். அதற்கு ஒரு சபாஷ் போடுவோம்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி ஒன்றியத்தில் இருக்கும் பச்சளநாய்க்கன்ப்பட்டி கிராம மக்கள் தான் அந்த சபாஷுக்கு சொந்தக்காரர்கள். சமீபத்தில் புனேயில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது பெற்ற ஊராட்சிகளில் பச்சளநாய்க்கன்பட்டியும் ஒன்று.
இந்த ஊராட்சியில் உள்ள 750 வீடுகளில், 80 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதியுள்ளது. வீட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதால் திறந்தவெளியை யாரும் கழிப்பறையாக பயன்படுத்துவதில்லை. இதையும் மீறி யாராவது திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தினால் கையில் தண்ணீர் சொம்புடன் பையில் ஐம்பது ரூபாயும் வைத்துக்கொள்ள வேண்டும். பைன் கட்ட வேண்டுமே! இந்த வம்பு எதற்கு என்று சுகாதார கழிப்பறைக்கு சென்று விடுகிறார்கள்.
இதுமட்டுமல்ல சாகடையில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதால் இந்த கிராம மக்கள் பெரிய அளவில் நோய் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. இங்குள்ள பனிரெண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் முக்கிய பணியே சுகாதாரம் காப்பது தான். மேல்நிலை தொட்டிகள் மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து விடுகிறார்கள்.
"கிராமத்தை தூய்மையாக வைப்பது ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு என்று அசட்டையாக இல்லாமல், எங்கள் கிராம மக்கள் கூட்டு முயற்சி செய்து சுகாதாரத்தை கடைபிடித்ததால் இவ்விருது கிடைத்தது.. விருதுடன் தரப்பட்ட பரிசு தொகையை தூய்மையை பாதுகாக்க செலவிட முடிவு செய்துள்ளேன்" என்று ஊராட்சி தலைவி லட்சுமி கூறினார்.
இது போன்ற செய்திகளை ஊடகங்களும் சிறந்த முறையில் மற்ற கிராமத்தில் வாழும் மக்களுக்கும் சேர்ப்பித்தால் நோய் பெருக்கம் குறையும்.

நன்றி: அதிகாலை

No comments: