நாம் தினமும் எத்தனையோ செய்தித்தாள்களையும், வார மாத இதழ்களையும், நூலகத்தில் எடுத்து வந்த தடியான புத்தகங்களையும் (சில சமயம் தலையணையாக பயன்படும்) படிக்கிறோம்.
ஆனால் படிப்பதனால் என்ன பலன் ஏற்பட்டது என்று சிந்தித்து பார்த்திருப்போமா?
சற்று சிந்திப்போம்.
கடைகளில் அமர்ந்து செய்தித்தாளை ஒரு வரி விடாமல் படித்து விட்டு தான் (விளம்பரம் முதற்கொண்டு) கீழே வைப்பார். சிலர் சில குறிப்பிட்ட செய்திகளை மட்டும் படித்து விட்டு வைத்து விடுவார். தலைப்பு செய்திகளை மட்டும் வாசிப்போர் பலர்.
இதே செய்திகளை தான் கதை போல் கட்டுரையாக மாற்றி, வாசிபோர் மனம் மகிழும்படி கொடுக்கிறார்கள் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற வார இதழ்களில். ஒரு சிறிய
விஷயத்தை வைத்து அது தொடர்பாக பல செய்திகளை ஒன்று திரட்டி கொடுப்பது தான் கட்டுரை. இது மாதிரி கட்டுரைகளை தான் நம்மால் படிக்க முடியும்.
எளிமையான உரையில் ஆங்கில கலப்பு சேர்த்து கதை தோரணையில் வரும் கட்டுரைகளை தான் நம்மால் தொடர்ந்து படிக்க முடியும்.
கடினமான சொற்களை போட்டு, ஒரே வரியில் மூன்று விசயங்களை வைத்து தன் தமிழ் புலமையை மொத்தமாக காட்டி எழுதப்படும் கட்டுரைகளை நம்மால் ஒரு பாராவுக்கு மேல் படிக்க முடிவதில்லை.
மொத்தமாக பார்க்கும் போது நாம் எதற்காக படிக்கிறோம் என்று பார்த்தால், அது அவரவர் டேஸ்டை பொறுத்தது. ஸ்போர்ட்ஸ், பங்குச்சந்தை, வியாபார உத்திகள், கம்ப்யூட்டர் தொடர்பானவை என்று பல விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உள்ளது. உதாரணமாக "கதை" எடுத்து கொள்ளுங்கள். அதிலேயே ஏகப்பட்ட டேஸ்ட் இருக்கிறது
துப்பறியும் கதை, பக்தி கதை, காதல் கதை என்று பட்டியல் நீளும்.
மெயின் மேட்டேருக்கு வருவோம்.
இவ்வளவு தூரம் படிக்கிறோமே... அதனால் என்ன பலன் கண்டீர்கள்?
ஹெல்த் சம்பந்தமாகவோ, பங்குச்சந்தை சம்பந்தமாகவோ படித்திருந்தால் அதை நம் வாழ்க்கையில் அப்ளை செய்து பார்க்கலாம். ஆனால் கதை மற்றும் சில ஜெனரல் கட்டுரைகளை படிப்பதால் என்ன பலன் இருக்கிறது என்று யோசித்து பார்த்ததுண்டா? அதை நம் வாழ்க்கையில் அப்ளை செய்ய முடியுமா?
முடியாது!
ஆனால் சில வேறு மாதிரியான பழங்கள் கிடைக்கிறது. பெரும்பாலும் குடும்ப நாவல், துப்பறியும் நாவல் படிப்பவர்களை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒன்று தெளிவாகும். ஒரு சம்பவத்தை சட்டென்று புரிந்து கொள்வார்கள். அதாவது ஒரு பிரச்சனை சம்பந்தமாக பேசும் போது எதிராளியின் மனோ நிலையை எளிதில் கிரகித்து விடுவார்கள். எதிராளி பேசும் விஷயத்தை வைத்து, அவர் எதனால் இப்படி பேசுகிறார் என்பதையும் கண்டுபிடித்து விடுவார்கள்.
நுணுக்கமான விசயங்களை கூட சீக்கிரமே உள் வாங்கி கொள்வார்கள். இந்த விஷயம் ஒரு சிறந்த நிர்வாகிக்கு அவசியம் தேவை.
சுருக்கமாக சொன்னால் டியுப் லைட்டாக வாழை மட்டையாக இல்லாமல் கற்பூரம் போல டக்கென்று பற்றி கொள்வார்கள் கொஞ்சம் திரும்பி குடும்ப தலைவிகளின் சீரியல்களுக்கு வருவோம். பெரும்பாலான பெண்கள் இப்போது டிவி சீரியல் பார்க்கும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில் தான் சமைக்கிறார்கள். இது சம்பந்தமாக நிறைய ஜோக்குகளும் வலம் வருகின்றன.
"எடுபட்ட பயக... கரண்ட் கட் பண்ற நேரத்தை மாத்தி வச்சுட்டாங்க.. பன்னண்டு டூ ரெண்டுன்னு மாத்திட்டாங்க.. அந்த நேரத்தில நாலு நாடகம் பார்க்க முடியாம போயிடுமே...!"என்பது சமீபத்திய வசனம்.
ஒரு சம்பவத்தை எழுத்துருவில் படிப்பதற்கும், காட்சிகளாக திரையில் காண்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கதை படிக்கும் போது நம் கற்பனை திரையில் நாமே காமிரா ஆங்கிளையும், கதாபாத்திர தோற்றங்களையும் முடிவு செய்கிறோம். அதாவது, கதை திரைகதை மட்டுமே மற்றொருவருடையது. நடிகர் நடிகையர், ஒப்பனை, சூழ்நிலை எல்ல்லாம் நாமே சிரிஷ்டிக்கிறோம் . அதனால் மூளைத்திறன் அதிகம் செலவிடப்படுகிறது.
ஆனால் டிவி பார்ப்பது அப்படி இல்லை பார்ப்பது மட்டுமே நமது வேலை. கதையா புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும். இதனால் மூளையின் வேலை முடக்கபடுகிறது. மூளைக்கு சோம்பல் தனம் வந்து விடுகிறது. மூளை மந்தமாக இருக்கிறது என்பது இதனால் தான். மற்ற எல்லா வேலைகளையும் டைரக்டர், காமிராமேன், ஒப்பனையாளர், நடிகர்கள் பார்த்து கொள்கிறார்கள்.
டிவி பார்ப்பதை விட புத்தகம் படிப்பதே மேல் என்று பீமேலுக்கும் சொல்கிறேன்!
srikarpagam