
கம்ப்யூட்டர் வைரஸ் பற்றி எழுதும் போது மறக்காமல் இந்த வைரஸ்ஸயும் பற்றி அவசியம் அலசுவார்கள். அது... ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இந்த ட்ரோஜன் ஹார்ஸ் வரலாற்று செய்திகளில் அடிபடுகிறது. அதாவது கம்ப்யூடர் கண்டுபிடிக்க படுவதற்கு முன் ட்ரோஜன் ஹார்ஸ் வந்து விட்டது. வைரஸ்ஸாக வரவில்லை. ஒரு போர் தந்திரமாக வந்து விட்டது. இனி வரலாற்று கதையை படித்தால் உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.
சுமார் 3000 வருடங்களுக்கு முன் கிரேக்க நாட்டில் ஹெலன் என்ற பேரழகி இருந்தாள். அதே கால கட்டத்தில் ட்ராய் நகரத்தில் பாரிஸ் என்பவன் இருந்தான். இவன் ஹெலனை கடத்திக்கொண்டு போய் தன்னுடைய நகரத்தில் வைத்துக்கொண்டான். ட்ராய் நகரை கிரேக்கர்கள் முற்றுகையிட்டு பத்து வருட காலம் போரிட்டனர் . இருபுறமும் ஏராளமான வீரர்கள் இறந்தனர். ஆனாலும் ட்ராய் கோட்டை சுவர்களை தகர்த்த முடியவில்லை.
அப்போது ஒரு நாள் கிரேக்கர்கள் மத குருவான கால்காஸ் என்பவர், "இந்த கோட்டைச்சுவர்களில் முட்டிக்கொல்வதால் ஒரு பயனும் இல்லை. வேறு ஏதேனும் தந்திரம் செய்யுங்கள். வெறும் படை பலத்தினால் பிடிக்க முடியாது. " என்றார்.
ஓடிசஸ் என்ற கிரேக்க தளபதி ஒரு தந்திரம் சொன்னார். மிகப்பிரம்மாண்டமான ஒரு மரக்குதிரை ஒன்றை அருமையான வேலைப்பாடுகளுடன் தயாரித்து அதற்குள்ளே கிரேக்க வீரர்களை ஒளித்து வைத்து அதை ட்ராய் காரர்களுக்கு பரிசளிக்கலாம் என்றார். போர் நடத்துவது தான் தீரமே தவிர கோழைத்தனமான தந்திரங்கள் செய்ய கூடாது என்று சிலர் கூறினார்கள். ஆனால் பத்து வருடம் நடந்த போரினால் கிரேக்க படையினர் சலித்து களைத்திருந்தனர் .ஆதலால் ஒடிஸ்ஸஸ் யோசனையை ஏற்றார்கள்.
இறுதியில் ட்ரோஜன் குதிரை தயாரிக்கப்பட்டது. ட்ரோஜன் என்றால் ட்ராய் நகரத்து பிரஜை என்று அர்த்தம். அதற்குள் படை வீரர்கள் புகுந்து கொண்டார்கள். கிரேக்க படையினர் போரிலிருந்து பின் வாங்குவது போல் பாசாங்கு செய்து ஒளிந்து கொண்டு காத்திருந்தார்கள்.
ஒரு மாபெரும் மரக்குதிரை திடீரென்று தங்கள் கோட்டைக்கு வெளியே நிற்பதையும் கிரேக்கப்படை வீரர்கள் யாரும் இல்லாததையும் கண்டார்கள் ட்ராய் வீரர்கள். ஒவ்வொருவராக வெளி வந்து அதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு கிரேக்க வீரன் அங்கே வந்து, அந்த மரக்குதிரையை ட்ராய் மக்களுக்கு பரிசாக தந்து விட்டு கிரேக்கர்கள் ஊர் திரும்பி விட்டார்கள் என்று கதை அளந்தான்.
அந்த மரக்குதிரையின் அழகில் மயங்கிய ட்ராய் மக்கள் அவ்வளவு அருமையான பரிசு கிடைத்ததில் மகிழ்ந்து போய் தங்கள் ஊருக்குள் அதை இழுத்துச் சென்றார்கள்.
மரக்குதிரைக்குள் ஒளிந்திருந்த கிரேக்க வீரர்கள் உடனே வெளிப்பட்டு எதிபாராத விதமாக தாக்கி கோட்டை கதவுகளை திறந்து கிரேக்கப் போர்வீரர்கள் உள்ளே நுழையவும், நகரத்தை கொளுத்தி நாசப்படுத்தவும் வழி செய்தார்கள்.
இந்த கதையையும் இப்போதுள்ள ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ்ஸயும் ஒப்பிட்டு பார்த்தால், பெயர் காரணம் ஒத்துப் போவதை பார்ப்பீர்கள். ட்ரோஜன் ஹார்ஸ் என்பது நமக்கு அதிகப் பயன்பாட்டினை தரும் ப்ரோக்ராம் போல (அதாவது அழகான பரிசுப்பொருள் போல) தோற்றத்தில் வரும். இதனை மகிழ்வுடன் இன்ஸ்டால் செய்தால் அல்லது கம்ப்யுட்டருக்குள் வர அனுமதித்தால் வைரஸ் போர் வீரர்கள் கம்ப்யுட்டரை துவம்சம் செய்துவிடுவார்கள்.



No comments:
Post a Comment